தமிழகத்தில் புயல் காரணமாக ஐந்து மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணியளவில் கரையை கடந்தது. ஆனால் புயல் கரையை கடந்த நிலையிலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகள் ஆரஞ்ச் அலர்ட் ஆக மாறியுள்ளது. மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். தற்போது புயல் புதுச்சேரியில் இருந்து வடமேற்கே சுமார் 50 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அதனால் மணிக்கு 85 முதல் 95 கிமீ வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. நண்பகலில் 45 கிமீ ஆக காற்று குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 5 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், திருவாரூர், திருப்பத்தூர், தஞ்சை, காரைக்கால், திருச்சி, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.