கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஹின் உத்னால்(28). கர்ப்பிணியான இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக விஜயப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சிகிச்சைக்கு பிறகு தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறி மருத்துவர்கள் அவர்களை டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக ஷாஹின்க்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிறு வலி சரியாகவில்லை.
இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வயிற்றில் கட்டி ஏதும் உள்ளதா என்று ஸ்கேன் செய்து பார்த்தபோது துணி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஷாஹினின் அறுவைசிகிச்சையின் போது வெளியேறிய இரத்தத்தைத் தடுப்பதற்காக பயன்படுத்தும் துணியை மருத்துவர் வயிற்றில் அப்படியே வைத்து தைத்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் சென்று சென்று முறையிட்ட போது கவனக்குறைவால் இது நடந்து விட்டதாகவும், மீண்டும் சிகிச்சை செய்து வயிற்றில் உள்ள துணியை எடுத்து விடலாம் என்றும் மருத்துவர் கூறியுள்ளார். ஆனாலும் கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷாஹினின் குடும்பத்தினர் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் தற்போது அறுவை சிகிச்சை மூலம் ஷாஹினின் வயிற்றில் உள்ள துணி அகற்றபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.