சென்னையில் பெய்து வரும் கனமழையால் பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது .இதனால் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் சென்னை பூந்தமல்லி பகுதியில் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் பிக்பாஸ் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தண்ணீர் புகுந்ததால் போட்டியாளர்கள் அச்சத்தில் இருந்துள்ளனர்.
இதையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் நிகழ்ச்சி நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.