மின்சார ரயில் சேவை அத்தியாவசிய பணி செல்பவர்களுக்கு மட்டும் இன்று வழக்கம்போல இயங்கும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவலின் காரணமாக, ரத்து செய்யப்பட்டிருந்த மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் கொரோனா முன்கள பணியாளர்களுக்காக மட்டும் குறைந்த அளவில் இயக்கி வந்தது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை கூடுதலாக இயக்கப்பட்டது. இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மின்சார ரெயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதனால் தற்போது சென்னையில் 244 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறன. இந்நிலையில் நிவர் புயல் எதிரொலி காரணமாக கடந்த 25-ம் மற்றும் 26-ம் தேதிகளில் 244 மின்சார ரெயில் சேவைகளையும் சென்னை ரெயில்வே கோட்டம் ரத்து செய்தது.
அதன் பின்னர் நிவர் புயல் கரையை கடந்ததால் நேற்று மதியம் 3 மணி – இரவு 8 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்றிலிருந்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்கு மட்டும் மீண்டும் 244 மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. மேலும் பயணிகள் தகுந்த ஆவணத்துடன் வந்தால் மட்டுமே இரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.