உத்திரபிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சாலை விபத்தில் சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அவரின் உடல் மருத்துவமனையின் படிக்கட்டின் பக்கத்தில் ஸ்ட்ரெச்சர் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அப்போது ஊழியர்கள் யாரும் அங்கு இல்லாததால் அங்கு வந்த ஒரு தெருநாய் ஒன்று சிறுமியின் உடலை கடித்துள்ளது. இதை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையில் இந்த அலட்சியத்தை கண்டு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றர். விபத்தில் சிக்கிய சிறுமி மருத்துவமனைக்கு வரும் முன்பே இறந்து விட்டாரா? அல்லது வந்தபின்தான் இருந்தாரா? என்பது தெரியவில்லை.
இதையடுத்து உரிய நடைமுறைகளுக்கு பிறகு சிறுமியின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் நாய்களின் தொல்லை அதிகம் இருப்பதாகவும், இதுபற்றி அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் சிறுமியின் உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டாம் என்று குடும்பத்தினர் கூறியதால், சிறுமியின் சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாய் வந்து கடித்த போது அதனை ஊழியர்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம் என்று மருத்துவமனை தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் கூறியதாக தெரிகிறது. இந்த வீடியோவை சமாஜ்வாடி கட்சியும் டுவிட்டரில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் அந்த வார்டில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், வார்டு பாய் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.