சென்னையில் புயல் காரணமாக பெய்த கன மழையால் வீடுகளில் புகுந்த 100 பாம்புகளை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட மழையால் குடியிருப்புகளில் பாம்பு வந்தால் கிண்டி வனத்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்க உதவி எண்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் கிண்டி வனத்துறைக்கு சென்னையில் தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர் மற்றும் முடிச்சூர் போன்ற பகுதிகளிலிருந்து வீடுகளில் பாம்பு புகுந்து விட்டது என்று கூறி 123 அழைப்புகள் வந்தன.
இதனைத் தொடர்ந்து கிண்டி வனத்துறையில் இருந்து பாம்பு பிடிக்கும் நபர்கள் அப்பகுதிக்கு சென்று பாம்புகளை பிடித்தனர். அதில் நல்ல பாம்புகள், சாரை பாம்புகள், தண்ணீர் பாம்புகள், வில்லிகோள் வரையன் பாம்புகள், பச்சைப் பாம்புகள் உள்ளிட்ட 100 பாம்புகள் பிடிக்கப்பட்டன. அவ்வாறு பிடிக்கப்பட்ட பாம்புகள் அனைத்தும் காப்பு காடுகளில் விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.