கோவையில் டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு வீடு திரும்பி இளைஞரை குத்திக் கொன்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நடந்தது என்ன பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ் கோவையில் தங்கி தனது உறவினரின் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு விக்னேஷ் விமான நிலையத்திற்கு பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வீடு திரும்பியபோது கஞ்சா போதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் விக்னேஷை தடுத்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி மதுகுடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது பணம் தர விக்னேஷ் மறுத்ததால் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
தகராறு முற்றிய நிலையில் வழிப்பறி கும்பலில் ஆத்திரம் அடைந்த ஒருவன் விக்னேஷின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளான். இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். இதனையடுத்து நால்வரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட விக்னேஷின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்தவர்கள் விக்னேஷை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே விக்னேஷ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரது உடல் பிணக்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பிளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விக்னேஷ்யிடம் பணம் கேட்டு கொடுக்காததால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணகால என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.