கமுதி அருகே 3 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேமுடிமன்னார் கோட்டை கிராமத்தை சேர்ந்த பொன்முருகன் என்பவருக்கும், தொப்பலாக்கரை சேர்ந்த குருதேவி என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மாத கைக்குழந்தை உள்ளது. பொன்முருகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த தேவி மனமுடைந்து தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி மற்றும் 3 மாத கைக்குழந்தை உடலிலும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் தாயும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முருகன் நாதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். குரு தேவி மற்றும் அவருடைய குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டு ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கும் காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.