நிவர் காரணமாக கடற்கரை பகுதியில் நிறைய தங்கம் கிடந்ததால் மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் சில காலம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடலோரப் பகுதியில் உள்ள உப்படா என்ற சிறிய கிராமப் பகுதியில் தங்கம் போல ஏதோ கிடப்பதை மீனவர் ஒருவர் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக ஓடி சென்று ஊர் மக்களிடம் கூறியுள்ளார். அனைவரும் கடலுக்கு வேகமாக ஓடிவந்து அப்போது அங்கு சிறிய சிறிய உருண்டைகளாக தங்கம் கிடைத்துள்ளது. அந்த பகுதியில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தலா 3,000 ரூபாய் மதிப்பிலான தங்கத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து கடல் அலையில் இன்னும் தங்கம் என்று என்று மக்கள் பல மணி நேரம் அங்கேயே காத்து கிடந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளில் உப்படா கிராமத்தில் இருக்கும் கோவில்கள்மற்றும் ஏராளமான வீடுகள் கடல் நீரால் அரிக்கப்பட்டு மாயமாகியுள்ளன. மேலும் இந்த பகுதிகளில் வீடுகள் மற்றும் கோவில் கட்டும் போது சிறிய அளவிலான தங்கத்தை கட்டிட பணிகளை தொடங்கும் முன் வைப்பதால் அது தான் அடித்து வரப்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளனர். இதனால் தற்போது தங்கம் எல்லோருக்கும் கிடைக்காமல் சிலருக்கு மட்டுமே அதிர்ஷ்டம் அடித்து உள்ளதாக கூறியுள்ளனர்.