வெள்ளத்தில் சிக்கிய தனது குட்டிகளை காப்பாற்றுவதற்கு நாய் செய்த செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே இரு பாலாற்று பாலங்களுக்கு இடையே ஏராளமான நாய்கள் வசித்து வருகின்றன. அங்கு புயல் காரணமாக பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் அங்கு இருந்த நாய்கள் அனைத்தும் வேறு இடங்களுக்கு ஓடின. இந்நிலையில் 8 குட்டிகளை ஈன்ற நாய் ஒன்று வெள்ளத்தில் சிக்கிய தனது குட்டிகளை ஒவ்வொன்றாக தனது வாயில் கவ்விக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு தூக்கிச் சென்றது.
அப்போது வெள்ளப்பெருக்கு அதிகமானதால் வெள்ளத்தில் சிக்கி நாய் சிறிது தூரம் சென்றது. இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிந்து தனது குட்டிகளை காப்பாற்றியது. ஆனால் அந்த நாயால் தனது ஐந்து குட்டிகளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மீதமிருந்த மூன்று குட்டிகளும் ஆற்றின் நடுவில் சிக்கிக் கொண்டன. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி இறங்கி 3 நாய்க்குட்டிகளையும் பாதுகாப்பாக மீட்டனர்.