வங்கக்கடலில் உருவாகியுள்ள புரேவி புயல் டிசம்பர் இரண்டாம் தேதி தமிழகத்திற்கு வரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தற்போது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
அதன் பிறகு மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் இரண்டாம் தேதி தென் தமிழக கடற்கரையை அடையும். அதனால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 65 கிமீ வேகம் வரை பலத்த சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமன்றி பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.