மத்திய பிரதேச மாநிலத்தில் தீப்பெட்டி இல்லை என்று கூறிய நபரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்டதற்கு தன்னிடம் தீப்பெட்டி இல்லை என்று கூறிய நபரை இரண்டு பேர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக மாநில போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டம் கரோக் கிராமத்தை சேர்ந்தவர்கள் யாஷ் மற்றும் அங்கேஷ் நண்பர்களான இவர்கள் இருவரும் தங்கள் கிராமத்தில் ஒரு கடையில் சிகரெட் வாங்கியுள்ளனர்.
வாங்கிக்கொண்டு வந்தவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த லால்ஜீ ராம் என்பவரிடம் சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்டுள்ளனர். அதற்கு லால்ஜீ ராம் தன்னிடம் தீப்பெட்டி இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு லால்ஜீ ராம் தலையில் சரமாரியாக குத்தி உள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த குணா மாவட்ட போலீசார் யாஷ் மற்றும் அங்கேஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.