கவுண்டயமஹாநதி வெள்ளத்தில் 36 மணி நேரமாக சிக்கி தவித்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பல போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த கூட நகரம், பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மனைவி எல்லம்மாள். சேதுக்கரை பொன்னம்பட்டி- இந்திராநகர் இடையே கவுண்டன்யமகாநதி ஆற்றின் நடுவே மேடான பகுதியில் இவர் கொட்டில் அமைத்து, அதில் 30க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை மாலை எல்லம்மாள் பன்றிகளுக்கு உணவு வைத்து விட்டு அங்கேயே இருந்துள்ளார். அப்போது மோர்தானா அணையில் கவுண்டன்யமகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் தண்ணீர் வடிந்து விடும் என அருகில் அந்த குடிசை பகுதியில் தங்கியுள்ளார். இரவு ஆற்றில் வெள்ளம் குறையாததால் போன் மூலம் வருவாய் துறையினருக்கு, அவரது குடும்பம் தகவல் அளித்தனர். ஆற்றில் 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் சென்றதால் எல்லை எல்லம்மாள் இருந்த பகுதிக்கு மீட்பு படையினர் செல்ல முடியவில்லை. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 17 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு சென்றனர். பகுதியை துல்லியமாக கண்டுபிடிக்க ‘ட்ரோன்’ கேமரா வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் இருப்பிடம் கண்டறியப்பட்டது.
24 மணி நேரத்தில் கடந்தும் அவரை மீட்கப்படாத காரணத்தால், அவரது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு விளக்கு வெளிச்சத்தில் பேரிடர் மீட்பு படையினர் கடுமையாகப் போராடி மீட்க முடியாததால் அவர்கள் திரும்பி சென்றனர். நேற்று அதிகாலை மீண்டும் அப்பகுதிக்குச் சென்று ஒரு மணி நேரம் போராடி எல்லம்மாள் பத்திரமாக மீட்டனர்.
சுமார் 36 மணி நேரம் வெள்ளத்தின் நடுவே சிக்கித் தவித்தால் எல்லம்மாள் மிகவும் சோர்ந்த நிலையில் இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவிகள் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவுண்டன்யமகாநதியில் எல்லம்மாளின் கணவர் முனியப்பன் சிக்கிக்கொண்டு போது தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.