புதுச்சேரி மூலகுலத்தில் வீடு புகுந்து புது மாப்பிள்ளையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மூலகுலம், மோதிலால் நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த பாலச்சந்திரன். இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மகன் சதீஷ்குமாருக்கும், விழுப்புரம் கோலியனூர் அருகே சாலைஅகரத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரின் மகள் சர்மிளா என்பவருக்கும் கடந்த மாதம் 18-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் சதீஷ்குமார் தனது மனைவியின் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார்.
பின்னர் அவர் மனைவியை தன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் சர்மிளா வர மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதுமாப்பிள்ளை சதீஷ்குமார் தனது வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலச்சந்திரன், அவரின் மனைவி, மகன் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது ஜெயக்குமார் சர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் நந்தகிஷோர் சந்திரசேகர் ஆகியோர் 4 பேர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலச்சந்திரன், சதீஷ் குமார் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த தந்தையும், மகனும் அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.