நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழுவினர் இன்று தமிழகம் வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளனர்.
வங்க கடலில் உருவான நிவர் புயலானது புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதன் விளைவாக சென்னை, கடலூர், செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் சாலைகள் எங்கும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடக்கின்றன. புயல் காரணமாக வீசிய பலத்த காற்றாலும், கனமழையாலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பயிர்கள் பெருமளவு சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.
மத்திய உள்துறை இணை செயலாளர் திரு. அசுதோஷ் அஞிஹோத்திரி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்கின்றனர். வேளாண்மை, சாலை போக்குவரத்து, மின்துறை, நிதி, ஊரக வளர்ச்சி, நீர் மேலாண்மை மற்றும் மீன் வளம் ஆகிய 7 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மத்திய குழுவினர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் நாளை மத்திய குழு ஆய்வு மேற்கொள்கிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு இந்த குழு அறிக்கை அளிக்க உள்ளது. அதன் பேரில் தமிழகத்திற்கான நிவாரண தொகையை மத்திய அரசு விடுவிக்கும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் நாளை மறுநாள் மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொள்கின்றனர்.