சம்பளம் வாங்க சென்ற பெண்ணிடம் டாக்டர் மற்றும் அவரின் நண்பர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், அந்த பகுதியில் டாக்டர் தீபக் என்பவரின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையிலிருந்து நின்ற அப்பெண் வேலை பார்த்த சம்பளத்தை வாங்குவதற்காக வீட்டு உரிமையாளரான டாக்டர் தீபக் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த டாக்டர் தீபக் மற்றும் அவருடைய உறவினரான அமிர்தராஜ்(35) ஆகிய இருவரும் அந்த பெண்ணிற்கு சம்பளம் தருவதாக கூறி வீட்டில் உள்ள தனி அறைக்கு அழைத்து சென்று பூட்டி வைத்து பாலியல் தொல்லை செய்துள்ளனர்.
சுமார் நான்கு மணி நேரமாக அறையில் அடைத்து வைத்து, எங்கள் ஆசைக்கு இணங்காவிட்டால் வீட்டில் நகையை திருடியதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இருப்பினும் அந்தப் பெண் அவர்களின் ஆசைக்கு இணங்காமல் அவர்களை எதிர்த்துப் போராடியுள்ளார். இதையடுத்து தீபக், தன்னுடைய வீட்டில் வேலைக்கார பெண் ஒருவர் நகையை திருடியதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் உடலில் நகக்கீறல்கள் இருந்ததாலு, ஆடைகள் கிழிந்திருந்ததாலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அப்பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பளம் வாங்கி தருவதாக கூறி, டாக்டரும் அவருடைய நண்பரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர்களின் ஆசைக்கு இணங்காததால் நகை திருடியதாக பொய் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தீபக் மற்றும் அமிர்தராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.