மத்திய பாஜக அரசின் மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லி மற்றும் எல்லைப் பகுதியில் பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு எவ்வித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் தான் அதில் பங்கேற்க முடியும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். விவசாய விளை பொருட்கள் மற்றும் விற்பனை தொடர்பாக மத்திய பாரதிய ஜனதா அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள மூன்று சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைக்கும் வகையில் அமைந்திருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மத்திய அரசின் இந்த விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சாலை மற்றும் ரயில் மறியல் ட்ராக்ட்ர் போராட்டம் என தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து டெல்லி நோக்கி வருகின்றனர். டெல்லி எல்லையில் சிக்ங்கு மற்றும் டிக்ரி பகுதியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் நிறன்காரி மைதானத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அதன் பின்னர் தான் மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா நேற்று நிபந்தனை விதித்தார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த விவசாயிகள் நிபந்தனைக்கு அழைக்காமல் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் தான் அதில் பங்கேற்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேலும் பல மாநிலங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் இணைந்துள்ளனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ள நிலையில் மத்திய பாரதிய ஜனதா அரசின் விவசாய விரோத செயல்பாடுகளைக் கண்டித்து விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.