ஆந்திரா வழியாக சென்னைக்கு லாரி மூலம் மணல் கடத்திய ட்ரைவர், கிளீனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை திருவள்ளுவர் மாவட்டம் ஆரணி காவல்உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் சின்னம்பேடு அகரம் கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவாயல் வழியாக சின்னம்பேடு நோக்கி ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று அசுர வேகத்தில் வாகன சோதனை சாவடியில் நிற்காமல் சென்றது. உடனே அந்த லாரியை போலீசார் விரட்டிச் சென்று சோதனை செய்தனர். சோதனையின் போது லாரியில் தவிடு மூட்டைகள் இருந்தது. உடனே அந்த முட்டைகளை திறக்க வேண்டுமென கூறினர். இதற்கு ஆந்திரா மாநிலமான நெல்லூரைச் சேர்ந்த லாரி டிரைவர் ரெங்கா செங்கையா (வயது 38) கிளீனர் லட்சுமைய்யா (வயது 25) ஆகிய இருவரும் மறுப்பு தெரிவித்தனர்.
பிறகு லாரியை போலீசார் திறந்து பார்த்தபோது தவிட்டு மூட்டைகளுக்கு இடையே ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த மணல் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இது போன்று பல வருடங்களாக சென்னைக்கு இருவரும் மணல் கடத்தியது போலீசாரின் கெடு பிடி விசாரணையில் அம்பலமானது. டிரைவர் ரெங்கா செங்கையா, கிளீனர் லட்சுமைய்யா இருவரையும் கைது செய்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். இருவர் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்ததினார்கள். தலைமறைவான ராமபுரத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ராஜேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.