இந்தியாவில் உள்ள சந்தையில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது 4 மீட்டருக்கும் குறைவான கார்களில் டீசல் என்ஜின்களை வழங்க மாட்டோம் என்று அறிவித்திருக்கின்றது. மேலும், ஒருசில நிறுவனங்கள் மட்டுமே விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட இருக்கின்றன. இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் மாடல் வகை காரை டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் டாடா அல்ட்ரோஸ் காரில் தற்சமயம் நெக்சான் மாடல் காரில் வழங்கப்பட்டுள்ள 1.5 லிட்டர் ரெவோடார்க் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் என்ஜினின் டி-டியூன் செய்யப்பட்ட வெர்ஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அல்ட்ரோஸ் காரின் செயல்திறன் குறையும். டி-டியூன் செய்யப்பட்ட என்ஜின் 91 P.H.P பவர், 210 N.M . டார்க் செயல்திறன் வழங்கும் என்றும் இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும் என தெரிகிறது.
நெக்சான் காரில் இருக்கும் என்ஜின் 108 P.H.P பவர், 260 N.M. டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. இதற்கு முன்னதாக வெளியான தகவல்களில் டாடா அல்ட்ரோஸ் காரில் புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இத்துடன் இந்த காரில் டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியானது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 16-இன்ச் அலாய் வீல்கள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகமானதும் புதிய டாடா அல்ட்ரோஸ் கார் மாருதி சுசுகி பலேனோ, ஹூன்டாய் ஐ20 மற்றும் ஹோன்டா ஜாஸ் போன்ற கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.