கோத்தகிரியில் காட்டுப்பன்றி தாக்கியதால் ஒரு பெண் உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி பகுதியில் உள்ள தென்றல் நகரைச் சேர்ந்தவர் சரோஜா என்ற காளியம்மாள். இவர் நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் தனது வீட்டின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாதை வழியாக வந்த காட்டுப்பன்றி காளியம்மாளை தாக்கியது. காட்டுப்பன்றி தாக்கியதால் தடுமாறிய காளியம்மாள் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அரசு மருத்துவமனைக்கு காளியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு அதே பகுதியில் இருந்த ஜோன் என்பவரையும் காட்டுப்பன்றி தாக்கியுள்ளது. இதனால் அவர் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. வலி தாங்காமல் அலறியதால் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வெளியே வந்து காட்டுப்பன்றியை விரட்டியுள்ளனர். பின்னர் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.