வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல் 15 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் பகுதியை அடைந்து, நாளை மன்னார் வளைகுடா பகுதியை கடந்த பிறகு டிசம்பர் 4ஆம் தேதி தென்தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்னும் 12 மணி நேரத்தில் புயல் மேலும் வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புயல் 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் கரையை கடக்கும்போது 100 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. கரையை கடந்த பிறகு புயல் நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே நாளை காலை வருகிறது. நாளை மறுநாள் அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே தென்தமிழக கரையில் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.