தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் டிசம்பர் 31 வரை 144 தடையை நீட்டித்து பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொது இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தடை விதிக்கப்படுகிறது.
மேலும் சென்னையில் போராட்டம், பேரணி மற்றும் உண்ணாவிரதம் ஆகியவை நடத்துவதற்கு டிசம்பர் 15ஆம் தேதி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு விதித்துள்ள இந்த தடையை மீறி செயல்படுபவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.