4 வயது சிறுவன் ஒருவர் 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் குல்பஹார் பகுதியில் வசிப்பவர் பஹிராத் குஷ்வாஹா. இவருடைய மகன் தனேந்திரா(4). குஷ்வாஹா தன்னுடைய வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனேந்திரா தன்னுடைய தந்தையுடன் விவசாயம் செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த தனேந்திரா, சுமார் 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தனேந்திராவின் தந்தை மீட்புப் படையினருக்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தற்போதுவரை சிறுவனின் உடல் நிலையை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிறுவனின் நிலையை கண்காணித்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் இதே போன்று மத்திய பிரதேசத்தில் ஆள்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.