தமிழகத்தில் நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனையடுத்து சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி, தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.