தமிழகத்தில் மட்டும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் அதிக அளவு இருப்பது ஏன் என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர்பதிவில், “நாட்டில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் 800 ரூபாய், மகாராஷ்டிராவில் 980 ரூபாய், ராஜஸ்தானில் 1200 ரூபாய், மேகாலயாவில் ஆயிரம் ரூபாய், ஆனால் தமிழகத்தில் மட்டும் 3000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வது என்ன மர்மம்?” என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்