நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, ” தமிழக மக்களின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் நெருங்கிவிட்டது. சட்டமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி, அதில் தோற்றால் அது மக்களின் தோல்வி என்று அர்த்தம். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தோம், அதனைப்போலவே தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வதற்கு திட்டமிட்டிருந்தோம். கொரோனா எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. மருத்துவர்களின் அறிவுரைப்படி என்னால் மக்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை.
தமிழக மக்களின் பிரார்த்தனையால் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து திரும்பி நான் உயிரோடு வந்துள்ளேன். ஆனால் அதனையும் பொருட்படுத்தாமல் என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களமிறங்கியுள்ளது. அரசியல் மாற்றம் தேவை… கட்டாயம் நிகழும்” என்று அவர் கூறியுள்ளார்.