தமிழகத்தில் புயல் காரணமாக இன்னும் மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் புயல் இன்னும் இரண்டு மணி நேரத்தில் கரையைக் கடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் ராமேஸ்வரத்தில் சூறை காற்று வீசும் என்றும், தூத்துக்குடியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேலும் நான்கு மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யும் என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.