27 வருடங்களுக்கு முன்பாக உறைய வைக்கப்பட்ட கருவை வைத்து குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள் டினா- பென் கிப்சன். இவர்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து இவர்களுக்கு கிடைத்த தகவலின் மூலம், அமெரிக்காவிலுள்ள தேசிய கரு தான மையத்தை நாடியுள்ளனர். அங்கு பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த தேசிய கரு தான மையத்தில் சுமார் 10 லட்சம் பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தம்பதியினர் 2017 ஆம் வருடம் இந்த கரு தான மையத்தில் உறையவைக்கப்பட்டிருந்த ஒரு கருவை தானமாக பெற்றுள்ளனர்.
பின்னர் அதன் மூலமாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். அந்த குழந்தைக்கு தற்போது மூன்று வயதாகும் நிலையில் மறுபடியும் அந்த தம்பதிகள் 27 வருடங்களுக்கு முன்பாக உறையவைக்கப்பட்டிருந்த ஒரு கருவை தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் மூலம் கடந்த அக்டோபர் மாதம் மற்றொரு பெண் குழந்தையையும் பெற்றுள்ளனர். மிக நீண்டகாலமாக உறையவைக்கப்பட்ட கருவை வைத்து குழந்தை பெற்றிருப்பது அமெரிக்காவில் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.