தமிழகத்தில் ஜனவரி 4ம் தேதி கட்டாயம் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவியதன் காரணமாக தமிழகத்தில், கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் ஆன்லைன் மூலமாக மட்டுமே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் கேட்பதற்காக பள்ளிக்கு வரலாம் என்று அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து நவம்பர் மாதம் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது மற்ற மாநிலங்களில் வகுப்புகள் நடக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் அங்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதியே பள்ளிகளை தொடங்க அரசு முடிவு செய்தது. ஆனால் மாணவர்களின் பெற்றோரும், அரசியல் கட்சியினர் பலரும் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே பெற்றோர்களிடம் கருத்து கேட்டு தான் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசு தள்ளி வைத்தது. இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை இறுதி தேர்வுக்கு தயார் செய்வதற்காக ஜனவரி 4ம் தேதி கண்டிப்பாக பள்ளிகள் திறக்க வேண்டும் என்று இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் தெரிவித்துள்ளது.