இந்துக்கள் கிறிஸ்தவ பண்டிகைகளை கொண்டாடினால் பகிரங்கமாக தாக்கப்படுவார்கள் என்று பஜ்ரங் தளம் மிரட்டல் விடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் மதசார்பற்ற நாடான இந்தியாவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றது. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தன்று தேவாலயத்திற்குள் இந்துக்கள் சென்றால் அவர்கள் கடுமையாக தாக்கப்படுவார்கள் என்று இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தளம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அசாம் மாநிலத்தில் பஜ்ரங் தளம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் மித்து நாத் பேசினார்.
அப்போது “கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்துக்கள் தேவாலயத்திற்கு சென்றால், அவர்கள் கடுமையாக அடி வாங்குவார்கள். ஷில்லாங்கில் கிறிஸ்தவர்கள் கோயில்களை பூட்டி வைக்கின்றனர். ஆனால் அவர்களோடு சேர்ந்து நாமும் கிறிஸ்துவ பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம்.
இது நடக்கக்கூடாது. டிசம்பர் 26 ஆம் தேதி தலைப்புச் செய்தி என்னவாக இருக்குமென்றால் ஓரியண்டல் பள்ளியை பஜ்ரங் தளத்தினர் ரவுடிகள் சேதப்படுத்தி விட்டனர் என்று எல்லா செய்தித்தாள்களிலும் வரப்போகிறது. அது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. கிறிஸ்மஸ் பண்டிகையை இந்துக்கள் கொண்டாடக்கூடாது. நம்மை குண்டர்கள் என ஊடகங்கள் அழைக்கின்றன. நமது இந்து பெண்கள் மீது கை வைத்தாலோ, தொல்லை செய்தாலோ நாங்கள் குண்டர்கள் மாறிவிடுவோம். அதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று பேசியுள்ளார்.