தமிழகத்தில் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. கடந்த மாதம் 24 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தொடர் கனமழை பெய்தது. அதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து வங்க கடலில் புதிதாக உருவான புரெவி புயலால் வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தப் புயல் தற்போது வலுவிழந்து தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தாலும் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வருகின்ற ஐந்தாம் தேதி மேற்கு மற்றும் தென்மேற்கு திசையை நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். அதன்பிறகு சேர்த்து கேரளப் பகுதியை நோக்கி நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளது.