மர்மநபர்கள் திருட சென்ற வீட்டில் எதுவும் இல்லாததால் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள எட்டயபுரத்தில் வசிக்கும் தம்பதிகள் மோகன்- சீமா. இவர்கள் சென்னையில் வேலை பார்த்து வந்ததால் வாரத்துக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே எட்டையபுரத்தில் வந்து தங்குவது வாடிக்கையாக வைத்துள்ளனர். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு எட்டையபுரம் வந்த அந்த தம்பதிகள் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென்று மோகன் வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் தீயில் கருகி இருந்துள்ளன. அப்போது சமையலறையில் எதோ சமைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து விசாரித்தபோது, சம்பவம் நடந்த நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்கு சென்று பூட்டை உடைத்து சென்றபோது அங்கு பணம், நகை எதுவும் இல்லாததால், கடுப்பான அவர்கள் முட்டையை எடுத்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு, வீட்டிற்கு தீயிட்டு சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.