போலீஸ் வேலை கிடைத்ததை காரணமாக கூறி காதலியை திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், எலந்தூர் தாலுகா ஹொன்னூர் பீச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி(19) என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த யோகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் காதலுக்கு சம்மதம் கூறினர். இதனால் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு யோகேஷ்க்கு போலீஸ் வேலை கிடைத்துள்ளது.
தற்போது அவர் போலீசாக பணியாற்றி வருகிறார். போலீஸ் வேலை கிடைத்ததால் காதலியுடன் சரிவரப் பேசாமல் அவரை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட நந்தினி அவரை தன்னுடன் பேசுமாறு, என்னை உடனடியாக திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் நந்தினியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து விட்டார். எனக்கு போலீஸ் வேலை கிடைத்துள்ளதால் உங்களால் உரிய வரதட்சனை தர முடியாது. எனவே நான் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த நந்தினி நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் நடத்திய விசாரணையில் போலீஸ் வேலை கிடைத்ததால் யோகேஷ் நந்தினியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் மனம் உடைந்த நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.