சிதம்பரம் நடராஜர் கோயில் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகின்றது. தற்போது மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சுரங்க கால்வாய் பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையை கடந்தது. இதற்கு புரேவி புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. தற்போது கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில் தண்ணீர் தேங்க காரணம் வடிகால் வசதிகளை சரியாக பராமரிக்க வில்லை என்று அங்குள்ள மக்கள் கூறியுள்ளனர். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு அரசர் காலத்தில் கட்டப்பட்ட சுரங்க கால்வாய் ஒன்று கோவிலின் அடிப்பகுதியில் இருப்பதாகவும், அதன் மூலம் நீரை ஒன்றரை கிலோ மீட்டருக்கு வெளியேற்ற முடியும் என்றும் கூறுகின்றனர். அந்த நீர் நடராஜர் கோயிலில் இருந்து தில்லை அம்மாள் ஓடைக்கு செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பிற்கால சோழர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த கால்வாயை பேராசிரியர் அண்ணாமலை ஆய்வு செய்துள்ளார். 1250 மீட்டர் நீளமும், தரைமட்டத்திலிருந்து 119 சென்டிமீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 77 சென்டிமீட்டர், அகலம் 63 சென்டி மீட்டர் ஆகும். சுட்ட செங்கல் வைத்து இந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிய கூடிய அனைத்தும் பழசாகி போனதால் மழைநீர் வெளியே செல்லாமல் தேங்கி உள்ளது. இதனை அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.