200க்கும் அதிகமான மக்கள் தீடிரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரில் 200க்கும் மேற்பட்ட மக்கள் மர்மநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 46 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என மொத்தம் 278 பேர் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற அறிகுறிகளோடு ஒருவர் பின் ஒருவராக, தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணம் என்ன என்று இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று மாநில துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான அல காளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதில் ஆறு வயது சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்ததால் விஜயவாடாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதில் பெரும்பாலான மக்கள் கோபரிதோட்டா, கோத்தா பேட்டா, டோர்பு வீதி மற்றும் அருந்ததி பெட்டா ஆகிய பகுதிகளிலிருந்து தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.