டெல்லி விவசாயிகள் நாளை நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். \
இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் இந்த போராட்டம் கட்டாயம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாளை பாரத் பந்த் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாரத் பந்த் போராட்டத்திற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளித்துள்ளது. மேலும் தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.