ஆந்திர மாநிலத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி பகுதியில் ஏமலூர் என்னும் பகுதியில் மக்கள் திடீரென மயங்கி விழ தொடங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல் மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது 100க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிலும் 6 பேர் மேல்சிகிச்சைக்காக விஜயவாடா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு உடல்நலம் பாதிக்கப் பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அதில் எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோரை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.