வெறும் ரூ.200க்கு லீசுக்கு எடுத்த நிலத்தில் விவசாயிக்கு வைரம் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பன்னா பகுதியில் வசிப்பவர் ஏழை விவசாயியான லகான் யாதவ்(45). இவர் பத்துக்கு பத்து நிலத்தை வெறும் 200 ரூபாய்க்கு லீசுக்கு எடுத்துள்ளார். அதில் சமீபத்தில் ஒரு குழி தோண்டி இருக்கிறார். அப்போது அதில் ஒரு கூழாங்கல் போன்று வித்தியாசமாக ஒன்று கிடந்துள்ளது. அதை அவர் எடுத்துக் கொண்டு அரசு அதிகாரியிடம் காண்பித்துள்ளார்.
அப்போது அது 14.98 கேரட் வைரம் என்று தெரியவந்ததால் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து அந்த வைரம் 60 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏலம் போயுள்ளது. அந்த பணத்தில் தற்போது அவர் ஒரு 1 ரூபாய்க்கு பைக் வாங்கியுள்ளார். மீதி பணத்தை தன்னுடைய நான்கு குழந்தைகளின் கல்விச் செலவுக்காக பிக்சட் டெபாசிட் செய்துள்ளார். இதுகுறித்து அந்த ஏழை விவசாயி கூறுகையில், “நான் படித்தவன் கிடையாது.
அதனால் இந்த பணத்தை என் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்ய போகிறேன். என்னுடைய உறவினர்கள் தான் மோட்டார் சைக்கிள் வாங்க என்னை வற்புறுத்தினார்கள். வைரம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த நிலத்தில் மேலும் இதுபோன்று ஒரு வரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்