பொதுமக்கள் ஊழல்வாதிகள் மாறிவிட்டனர் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில்” தமிழக விவசாய துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிப்பு காரணமாக அக்டோபர் 31ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். கும்பகோணம் நகரில் துரைக்கண்ணு ஆதரவாளர்களின் வீடுகளில் 300க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான உண்மையை துரைக்கண்ணு ஆதரவாளர்கள் மறைத்து வருவதாக காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் 800 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகவும், சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுக தலைமையில் கொடுத்து வைக்கப்பட்டிருப்பது என்று எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மே மாதம் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்காளர் கொடுப்பதற்காக இந்த பணத்தை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் பணத்தைப் பதுக்கி வைக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இது போன்ற முறைகேடுகளை தடுக்க உரிய வழிகாட்டு நடைமுறைகள் இல்லை. நீதிமன்றத்தால் மட்டுமே இது போன்ற முறைகேடுகளை தடுக்க முடியும். ஆளுங்கட்சியினர் 800 கோடி பதுக்கி வைத்திருந்த தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் வழியாக புகார் அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் கும்பகோணம் 800 கோடி விவகாரம் குறித்து, 3 வழக்குகளின் பின்னணி குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும்” என்று அந்த வழக்கில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வாக்காளர்கள் பத்து ஓட்டு, பதினைந்து ஓட்டு என்று பேரம் பேசி விட்டு பணத்தை வாங்குகின்றனர். பொதுமக்களே ஊழலில் ஈடுபடுவது வேதனையை தருகிறது. ஒவ்வொரு தொகுதிகளில் அரசியல்வாதிகள் 30 முதல் 60 கோடி வரை சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றனர் என நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர். இது வருமான வரிக்கு தெரிந்தே, அரசியல் கட்சிக்கு இடையே தேர்தலுக்காக கோடிக்கணக்கில் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகின்றது. அடிப்படையில் முறையே சரி இல்லை. எனவே ஒவ்வொருவரிடம் மாற்றம் வர வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பின்னர் விரிவான விசாரணைக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.