நாடு முழுவதும் இன்று விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு செலுத்தி வருகின்றனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.
அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு தழுவிய முழுஅடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தொல்லை தர விரும்பவில்லை என்பதால், இந்த முழுஅடைப்பு இன்று பகல் 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு முடிவடையும் என இந்திய விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் மருத்துவ சேவைகளான ஆம்புலன்ஸ் போன்ற முக்கிய சேவைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது. இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஆதரவு செலுத்தியுள்ளனர்.