நம் நாட்டின் விவசாயிகளை நிலைகுலைய செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும் நொறுங்கட்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.
அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று தொடங்கியுள்ளது. அந்த போராட்டத்தால் நாடு முழுவதும் பொது போக்குவரத்து சேவை இயக்கப்படவில்லை. மேலும் தமிழகத்தில் போராட்டத்தை வெற்றிபெறச் செய்யும் நோக்கில் பல்வேறு இடங்களில் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்து, வேன் மற்றும் ஆட்டோக்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி பெரிய மார்க்கெட்களில் மற்றும் மீன் அங்காடிகள் திறக்கப்படாமல் முழுவதும் மூடப்பட்டுள்ளன. விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது. உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலைபேசும் மூன்று வேளாண் சட்டங்கள். உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை. மேலும் #StandWithFarmers என நடைபெறும் #BharatBandh வெல்லட்டும்.. மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்”என்று அவர் கூறியுள்ளார்.