Categories
தேசிய செய்திகள்

அரசு மனம் திறக்க வேண்டும்… கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்…!!!

நாட்டின் கதவுகள் இன்று திறக்கும் போது மத்திய அரசும் மனம் திறக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.

அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று தொடங்கியுள்ளது. அந்த போராட்டத்தால் நாடு முழுவதும் பொது போக்குவரத்து சேவை இயக்கப்படவில்லை. மேலும் தமிழகத்தில் போராட்டத்தை வெற்றிபெறச் செய்யும் நோக்கில் பல்வேறு இடங்களில் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ரத்தம் உறையும் குளிரிலும், பித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டத்தை கண்டங்கள் கவனித்துக் கொண்டு இருக்கின்றன. அதை நீளவிடக்கூடாது. இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும் போதே மத்திய அரசும் மனம் திறக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |