Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 51 இடங்களில்… “தயாராக இருக்கிறோம்”… டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் பேட்டி..!!

தமிழகத்தில் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசியை சேமித்து வைக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக ஜே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தால் மட்டுமே வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் நேற்று முன்தினமே சொந்த ஊர்களிலிருந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து அந்தந்த கல்லூரிகளிலேயே அங்கு வரும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து மாணவர்களும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், தொடர்ந்து அவர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை சோதனை செய்த பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நேற்று முதல்நாள் மாணவர்களின் வருகை என்பதால் ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவற்றை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி உடன் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே ராதாகிருஷ்ணன் ” தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவதால், அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில் 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் மூலம் பரிசோதனை செய்தல், சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் நோய் விலகி விடும் என்று எண்ணி அலட்சியமாக இருத்தல் கூடாது.

தொடர்ந்து முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். தமிழகம் முழுவதும் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசிகளை பாதுகாப்புடன் சேமித்து வைக்கும் பொருட்டு தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு தடுப்பூசி வினியோகித்தல் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் தரவில்லை. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் எவ்வாறு வினியோகிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |