மழைநீர் கால்வாயில் தவறி விழுந்ததில் தாயும் மகளும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரை அயனம்பாக்கத்தில் வசித்து வருபவர் கரோலின் பிரிசில்லா. இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் இவாலின். கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வரும் காரணத்தினால் இருவரும் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஷாப்பிங் முடித்து விட்டு இருவரும் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளனர். தாம்பரம், மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
நேற்று மாலை பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட இந்த பகுதியில் புறவழி சாலைக்கும், இணைப்பு சாலைக்கும், இடையே 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 அடி ஆழமும், மூன்று அடி அகலத்திற்கு மழைநீர் கால்வாய் அமைந்துள்ளது. அது முறையாக பராமரிப்பு இன்றி சேரும், சகதியுமாய் கழிவுநீர் கலந்து ஓடுகின்றது. சாலையை ஒட்டி இடது பக்கம் திறந்த நிலையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
சாலைக்கு சமமாக மூடி இல்லாமல் திறந்த நிலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த வடிகால் சாலையோரம் தொடர்ந்து வந்தது. அப்பகுதியில் மழைநீர் வடிகால் இருந்ததால் தாயும், மகளும் இருவரும் தவறி விழுந்து கால்வாயில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இருசக்கர வாகனம் மட்டும் தனியாக இருந்ததால் அப்பகுதியில் வந்த நபர்கள் சந்தேகப்பட்டு, அங்கு பார்த்த போது தாயும் மகளும் காயங்களுடன் இறந்து கிடந்தனர்.
பின்னர் போலீசுக்கு தகவல் அனுப்பப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்தி அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் தாஸ், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, மூன்று வாரங்களில் சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி ஆணையர் ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உள்ளது.