இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருவதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய நாட்டில் பெண்கள் பாதுகாப்பு என்பது நாள்தோறும் கேள்விக்குறியாகவே தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு கொண்டே தான் வருகின்றது. இந்திய தண்டனை சட்டத்தின் படி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் “Performed with Intent to outrage her modesty” எனக் குறிப்பிடுகின்றது. அதாவது இந்த குற்றங்கள் யாவும் முற்றிலும் பெண்களின் சுய மரியாதையை சீர்குலைக்கும் வகையிலேயே நடப்பன என இந்திய தண்டனை சட்டம் சுட்டிக்காட்டுகின்றது.
சமீப காலமாக ஒவ்வொரு 16 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நிகழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் தலைநகர் டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடப்பதாக ஆய்வு அறிக்கை கூறுகின்றது. 2017 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 3,59,249 குற்றங்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை வெளியானது.
அதேபோல் 2018ம் ஆண்டு 3,78,736 குற்றங்கலும், 2019ஆம் ஆண்டு 1.5% குற்றங்கள் அதிகரித்து 4,55,866 குற்றங்கள் நடந்துள்ளது. ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. நாட்டில் பெண்கள் பாதுகாப்பை மென்மேலும் கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது. பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை ,அத்துமீறல் குற்றங்கள் போன்ற பாதிப்புகளில் பெண்களுக்கு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களால் மட்டுமே நடக்கின்றது.
தற்போது உள்ள சட்ட திட்டங்கள் போதுமானதாக இல்லை என்று பொதுமக்களும், சமூக செயல்பாட்டாளர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு இருந்த போதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால் பெண்கள் வாழ தகுதியற்ற நாடு என்ற நிலையை இந்தியா நிச்சயம் அடையும் என்ற அபாயம் நிலவுகிறது.