டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த தமிழ்வழி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் நேற்று ஒப்புதல் அளித்தார். தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்கான பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழ் வழியில் படித்து உரிய தகுதி உடைய கிராமம் புற மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒதுக்கீடு கொண்டு வர வேண்டுமென்று தேர்வாணையம் முடிவு செய்தது.
அதன்படி பள்ளி கல்லூரி என இரண்டிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இட ஒதுக்கீட்டில் இனி வேலை வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 8 மாதம் ஆகியும் ஆளுனர் எந்த பதிலும் அளிக்கவில்லை.
பல்வேறு கட்சியினரும் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் எட்டு மாதங்களாக ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. எட்டு மாதங்களுக்குப் பிறகு சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் நேற்று ஒப்புதல் அளித்தார். இதன்படி கல்வி தகுதியை முழுவதும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே இந்த சட்டத்தின் மூலம் பயனடைய முடியும். உதாரணமாக குரூப் 1 மற்றும் குரூப் 2 பணியிடங்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.