தமிழகத்தை அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்க இருப்பதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நிவர், புரெவி என இரண்டு புயல்கள் வங்க கடலில் உருவாகி தமிழகத்தை தாக்க வந்தது. அதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மீண்டும் ஐந்து புயல்கள் தமிழகத்தில் உருவாகும் என அதிர்ச்சித் தகவல் சமூகவலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.அதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இது பற்றி அமைச்சர் உதயகுமார் கூறுகையில், “அடுத்தடுத்து ஐந்து புயல்கள் தமிழகத்தை தாக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். வானிலை மையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே மக்கள் நம்பவேண்டும். மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை இருக்கும். புயல் முற்றிலும் வலுவிழந்து விட்டது. அதனால் மக்கள் வதந்திகளைக் கண்டு அஞ்ச வேண்டாம். நிம்மதியாக இருங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.