டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இளம் பெண் விவசாயி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.
அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் நடந்தது. அதில் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஹரியானாவை சேர்ந்த இளம் பெண் விவசாயி அஜய் மூர்(32) நேற்று மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மற்றும் அரியானா எல்லையில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் திடீரென மரணமடைந்தார். அவர் கடும் குளிர் காரணமாக உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி மேவா சிங்(48) என்பவரும் உயிரிழந்தார். இவர்களின் மரணம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவர்களின் கோபத்தை அதிகப் படுத்தியுள்ளது. இதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.