இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நச்சத்திர விடுதிகளில் தற்கொலப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதம் மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலின் சோகத்தில் இருந்து இலங்கை மெல்ல மீண்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் கலவரம் வெடித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான தவறான பதிவால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இன்று காலை 6 மணி வரை அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பதற்றம் காரணமாக இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்க இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.