2ஜி ஊழல் குறித்து முதலில் வழக்கறிஞ்சர் ஜோதியிடம் பேசிய பிறகு நாங்க பேசுறோம் என அமைச்சர் ஜெயக்குமார் திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது, ராஜா ஒரு வழக்கறிஞர். அவர் சட்டம் பற்றி அனைத்தும் தெரிந்து வைத்திருக்கலாம். அவர் எப்படிபட்ட வக்கீலுனு எனக்கு தெரியாது. ஆனால் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இவரே தீர்ப்பு எழுதிய மாதிரி அவரின் கருத்து உள்ளது. வழக்கு நடந்து கொண்டு இருக்கின்றது, வழக்கின் முடிவு என்ன ? அதனை பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது போல, தவறு செய்தவன் ஜெயிலுக்கு செல்ல வேண்டும், தண்டனை பெற்றாக வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு இல்லை என்றால் கூட பேசலாம். தற்போது மேல்முறையீட்டில் இருக்கும் வழக்கில் விரைவில் கம்பி எண்ணுகின்ற சூழலில் அவரே இன்று தீர்ப்பு எழுதியதை போல செய்தியாளர்களை அழைத்து, தான் நல்லவர் என்று பேசினால் ஏற்கக் கூடியதா ? என கேள்வி எழுப்பினார்.
அம்மா வழக்கை இவர் கோடிட்டு காட்டுகின்றார். உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது இறந்தவர்கள் பற்றி நாம் எந்த நிலையிலும் பேசக் கூடாது, அது பண்பாடு இல்லை என்று கூறி விட்டது. ஆனால் திமுகவிற்கு பண்பாடு கிடையாதா ? ராஜாவிற்கு பண்பாடு கிடையாதா ? அவர் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அம்மாவின் வழக்கு முடிவு பெற்றுவிட்டது.
உச்ச நீதிமன்றம் முடித்து வைத்த வழக்கு பற்றி இவர் பேசுவது எதற்காக ? அவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ராஜா ஒரு வழக்கறிஞர், ஜோதி ஒரு வழக்கறிஞர், ஜோதி ஒரு 30 நிமிடங்களுக்கு மேலாக திமுகவையும், ராஜாவையும் கிழிகிழியென கிழித்தார். இரண்டு வழக்கறிஞர்களும் மோதிக் கொள்ளலாம்.
நான் வழக்கறிஞ்சரிடம் காலையில் பேசினேன் நான். நீங்க பேட்டி கொடுக்கும் போது சொல்லுங்க…. நேரம் முடிவு செய்யுங்க…. நான் வருகின்றேன், எந்த இடம் என்று சொல்லுங்க, நான் என்னுடைய செலவில் மேடை போட்டு, எல்லாமே ரெடி பண்ணி, எங்கள் வழக்கறிஞர் ஜோதியை அழைத்துக் கொண்டு வருகின்றேன். நீங்கள் வர தயாரா ? முதலில் அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க. அதன் பிறகு நாங்கள் நேரடியாக வந்து வாதம் செய்கிறோம் என பதிலளித்துள்ளார்.